Thursday, June 16, 2005

பெண்ணின் அந்தரங்க உறுப்பு.....

குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அது பெண்ணாக இருக்கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மானமாகி, ஆணாக இருக்கிற பட்சத்தில் ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறுப்பும் வளர ஆரம்பிக்குமாம்.

முதல் முறை செக்ஸ் உறவின் போது பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை கிழிய வேண்டுமா, இரத்தப் போக்கு கட்டாயமா என்பது பலருக்கும் மண்டையைக் குடைகிற கேள்வி. பெண்ணின் நடத்தையை சந்தேகிக்க வைக்கிற அளவுக்கு இது தீவிரமானதாகவும் இருக்கிறது. செக்ஸ் உறவின் மூலம் மட்டும்தான் இந்தக் கன்னித்திரை கிழிய வேண்டும் என்பதில்லை. விளையாட்டு, நடனம், நீச்சல், உடற்பயிற்சி எனப் பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அபூர்வமாக சில பெண்கள் இந்த கன்னித்திரை இல்லாமல் பிறப்பதும் உண்டு. இன்னும் சிலருக்கு அந்த சவ்வு மிகவும் தடித்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அறுவை மூலம் அது அகற்றப்பட்டால் தான் அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.


பிறப்புறுப்புக் கசிவு என்பது சகஜமான விஷயம். செக்ஸ் உறவின் போது இந்தக் கசிவு இருக்கும். சில பெண்களுக்கு இந்த அளவு அதிக மாகவும், சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். இரண்டுமே சாதாரணமானவைதான்.


பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராயம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம்.


உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.


பல பெண்களையும் தர்ம சங் கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.


மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.


ஒரு பென்சில் நுழையக் கூடிய அளவே உள்ள பிறப்புறுப்பானது, பிரசவத்தின் போது ஒரு குழந்தையையே வெளியேற்றும் அளவுக்குப் பன்மடங்கு பெரிதாக விரிந்து கொடுக்கும். அதற்காகக் கவலை வேண்டாம். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதன் பழைய அளவுக்கே சுருங்கி விடும்.


பிறப்புறுப்பிலிருந்து வாடை வீசுவது ரொம்பவே சாதாரணமான விஷயம். அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங்குகிறது என்பதற்கான அடையாளங்களில் அதுவும் ஒன்று. இது தவிர நீங்கள் உட்கொள்கிற உணவின் தன்மை, அதாவது மசாலா, பூண்டு மாதிரியான உணவுகள், மாத விலக்கு சுழற்சியின் தன்மை, செக்ஸ் உறவுக்குப் பிறகான சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து அந்த வாடை அதிகரிக்கலாம்.


பிறப்புறுப்பிலிருந்து வீசும் துர்வாடையை மறைக்கப் பல பெண்கள் அங்கே சென்ட் உபயோகிப்பதுண்டு. சென்ட், வாசனை சோப், டிஷ்யூ மாதிரியானவை அந்தப் பகுதியை பாதிக்கும். வெறும் தண்ணீரும், மிதமான சோப்பும் மட்டுமே பிறப்புறுப்பு சுத்தத்துக்குப் போதும்.


குழந்தை பிறந்த பிறகு பிறப்புறுப்பின் இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும்,அதன் விளைவாக தம்பதியருக்கிடையேயான நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு, கெகெல் எனப்படும்பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.


சினைமுட்டை சினைக்கிற காலக் கட்டத்தில் பெண்களுக்கு அந்தரங்க உறுப்பின் கசிவு சற்றே அதிகமாக இருக்கும். அதாவது ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை இருக்கும். இறந்த செல்களின் வெளியேற்றம்தான் இந்தக் கசிவு. மற்ற நாட்களில் இந்தக் கசிவு ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் அளவாகக் குறைந்து விடும்.


அபூர்வமாக சில பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே ஏதேனும் பொருட்கள் உள்ளே சென்று விடக் கூடும். அது கர்ப்பப்பையில் சென்று மிதக்காது. வெறுமனே விரல்களை விட்டு அதை எடுக்க முடியுமா எனப்பார்க்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.


ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க இப்படிப்பட்ட சிகிச்சைகள் வரப்பிரசாதம்.

by Dr.ஷர்மிளா

0 Comments:

Post a Comment

<< Home