Wednesday, June 15, 2005

Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம்.

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது. காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கே சிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

தாமதிக்காமல் முதலில் மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளா எனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றை அகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும் பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச் சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அது பரவி, மார்பகங்களையே அகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள். எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும் வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப் பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில் எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வு அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? - வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும் உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு. அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை. உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்ட மாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்கு உதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாக இருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.

என் வயது 38. கர்ப்பப்பை அறுவை செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. லேசாகத் தொட்டாலே வயிறு வலிக்கிறது. வெள்ளையாக சீழ் போலக் கசிகிறது. நான் பஞ்சாலையில் பணிபுரிகிறேன். மீண்டும் வேலைக்குப் போகலாமா? இந்த அறுவைக்குப் பிறகு உடல் பலவீனமாகிவிடும் என்பதும், எடை ஏறும் என்பதும் உண்மையா? - ராஜி, பழனி.

கர்ப்பப்பை அறுவையால் உடல் பலவீனமாகாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அறிகுறிகளைப் பார்த்தால் தையல் போட்ட இடத்தில் இன்பெக்ஷன் ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது. அதனால்கூட வயிற்று வலி இருக்கலாம். பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அறுவை சிகிச்சைக்கும், உடல் எடை ஏறுவதற்கும்கூட எந்தத் தொடர்புமில்லை. அது உங்கள் உடல்வாகைப் பொறுத்தது. நடைப்பயிற்சி நல்ல தீர்வு தரும். நீங்கள் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், கீரை, வைட்டமின் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆஸ்துமா மாதிரியான சுவாசக் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் நீங்கள் வேலையைத் தொடர்வதில் பிரச்சினை இருக்காது.

என் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார். மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். - நிர்மலா தேவி, ரத்தினபுரி.

மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வை சுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள். சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்கு உதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம் ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்.

என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒரு கிட்னியுடன்தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன் உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா? - எஸ்.பிரியா, திருச்சி.

நீங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர் கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வு காணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும் குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு.

என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகிறது. என் மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டே போகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

இது இன்வர்ட்டட் நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின் நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலி இருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.

என் வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள் பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு? - பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகி.

உடற்பயிற்சி ஒன்றுதான் ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக் கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டை வைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள் அறிவுறுத்தத் தக்கவையல்ல.

என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது. பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார். எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா? - பெயர் வெளியிட விரும்பாத நாகர்கோயில் வாசகி.

கல்யாணச் சடங்குகளாலும், அதனால் ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவு முழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும் என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில் ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுய இன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையை நிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம். அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில் வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்று தீர்வு காணலாம்.

என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பாதிப்பு ஏதும் உண்டா? - எம். மனோன்மணி, டி.எம்.பாளையம்.

அளவுக்கதிக இரத்தப் போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. கழிவுத் திசுக்கள் அதிகமிருந்தால், இப்படி கட்டி, கட்டியாக இரத்தம் வெளிறேலாம். கர்ப்பப்பையில் கட்டி ஏதேனும் இருந்தாலும் இப்படி இருக்கலாம். ஹார்மோன் கோளாறு உள்ளதா என்றும் பார்க்கவும். இது எல்லாமே குணப்படுத்தக் கூடியவையே. இரத்தம் அதிகம் வெளியேறினால் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவை அதிகமுள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். பயப்பட வேண்டிய அவசியமில்லை.

என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாக மாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்பு வந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும். - தேவி, வளவனூர்.

மாரடைப்புக்கும், இல்லற வாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின் காரணமாக, இயல்பான உணர்வுகளைக் கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அது மாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்கு வடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருதயக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படி இயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியான உங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம். கணவரின் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாக உறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்திய உணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காக சாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால் மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாக இருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலே போகவோ கூடும்.

எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா? - பெயர் வெளியிட விரும்பாத செஞ்சி வாசகி.

நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச் செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போட மாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானே தவிர, நீண்ட காலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கும். கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டான பிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில் செய்யக் கூடிய முடிவில்லை இது.

என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக் குணப்படுத்த முடியுமா? - விஜிலா, நெல்லை.

திடீரென உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள். உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும் தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம் மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம் சாப்பிடலாம். மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரது ஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்று சாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒரு ஆப்பிளும் சாப்பிடவும். இந்தப் பிரச்சினைக்கென்றே பிரத்யேக யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் மருத்துவர் அல்லது யோகாசன நிபுணரின் ஆலோ சனையின் பேரில் செய்யலாம். மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்கு மிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை. எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாக சந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப் பழகுங்கள், மருந்தே உணவு என்ற நிலை ஆபத்தானது.

எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 30. எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோம வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. இதனாலேயே எனக்கும், என் கணவருக்கும் ஒத்துப் போகாமல் அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். என் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத நாகப் பட்டிணம் வாசகி.

பரம்பரைத் தன்மை, முறையற்ற மாதவிலக்குக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள், ஹார்மோன் கோளாறு போன்ற ஏதேனும் ஒன்றுதான் இப்படிப்பட்ட ரோம வளர்ச்சிக்குக் காரணம். செயற்கை மணம் மற்றும் குணம் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இப்படி ஹார்மோன் கோளாறு உண்டாகி, ரோம வளர்ச்சி அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தேவையற்ற ரோமங்களை அகற்ற வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சை மற்றும் கிளிசரினின் கலவையே வாக்ஸ். இது சருமத்தை பாதிக்காது. கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகிக்காதீர்கள். குளிப்பதற்கு சோப்புக்குப் பதிலாக பயத்தம் மாவு உபயோகிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சளையும் அத்துடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். இத்துடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் இரண்டை யும் மாற்றி மாற்றி சேர்த்து புருவங்களில்படாமல் தேய்த்துக் குளிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக் கிழங்கு என்று கிடைக்கும் அதை வாங்கி அரைத்து அப்படியே உடம்புக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், ஆறு மாதங்களில் ரோம வளர்ச்சி நன்கு குறையும். வாரம் ஒரு முறை உப்பில்லாத வெண்ணையை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறிக் கழுவவும். முகம் பட்டு போலாகும். வீட்டுப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, கணவரிடம் பேசி சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.

என் வயது 26. மிகவும் ஒல்லியாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது. உடல் இளைக்க மாத்திரைகள் இருப்பதைப்போல், குண்டாக்க ஏதேனும் சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்களேன். - மாலா, நெற்குன்றம்.

குண்டான உடலைக் குறைப்பதுதான் இப்போது பல பெண்களுக்கும் பிரச்சினையே. குண்டாக விரும்புவோர் உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச் சின்ன லட்டு களாகப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒரு சிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். ச்யவன பிராஷ் லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். தினம் சிறிது தேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். தினம் இரு வேளை ஐந்து பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவுகள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பிடவும். காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியில் கைப்பிடியளவு கொண்டைக்கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலை யில் சாப்பிடலாம். இவற்றையெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பம் உறுதியான நாள் முதல் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி பயமுறுத்துகிறார்கள். ரொம்பவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும் என்கிறார்கள். அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்? - கே.எஸ்., திண்டிவனம்.

அபார்ஷன் எனப்படுகிற கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால்.- முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால்.- காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலா போன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ் சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர் பால் கட்டாயம் குடிக்கவும். கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும். இப்படியெல்லாம் இருந்தாலே உங்களுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலை வேண்டாம்.

எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு? - வி. சங்கீதா, சென்னை-30.

அதிக சூடுதான் வெள்ளைப் படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம் தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக் கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக் குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டு மாதிரி சமைத்து சாப்பிடவும். நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமே போகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரை மூன்றும் அதிக மிருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக் கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம் பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்து மூன்று வேளைகள் குடிக்கவும். அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன் உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகித உணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாக வெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

என் வயது 25. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. எனக்கு மாதவிலக்கு எப்போதும் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் எங்களுக்குள் இல்லற வாழ்க்கை என்பதே அபூர்வமாகி விட்டது. இந்நிலையில் நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டா? - விஜி, சென்னை.

மாதவிலக்கு என்பது இப்படி பத்து, பனிரெண்டு நாட்களுக் கெல்லாம் வரக் கூடாது. அது இரத்த சோகையில் கொண்டு விடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப் போக்கு தொடர்கிறது என இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் போஷாக்கான ஆகாரம் உட்கொள்ள வேண்டும். தினம் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை என ஏதேனும் ஒரு பழம் சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம் சாப்பிடலாம். இரண்டு வகை காய், கறிவேப்பிலை, முருங்கைக் கீரை மற்றும் முட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவை மாத விலக்கின் போது உதிரப் போக்கில் உடல் இழக்கும் இரும்புச் சத்தை ஈடுகட்டி, எதிர்ப்பு சக்தியைத் தரும். முதல் வேலையாக மருத்துவரை சந்தித்து இத்தனை நாட்கள் உதிரப் போக்கு வராமலிருக்க சிகிச்சை மேற்கொள்ளுங்கள். கவனிக்காமல் விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகி விடுவீர்கள். இப்பிரச்சினையை சரி செய்த பிறகு குழந்தைப் பேற்றைப் பற்றி யோசிக்கலாம். பொதுவாக உதிரப் போக்கு இருக்கிற நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது அசவுகரியமாக இருக்கலாம். தொற்றுக் கிருமிகள் பரவவும் அது காரணமாக அமையும். தாமதிக்காமல் சிகிச்சையைத் தொடங்குங்கள்.

எனக்கு சமீபத்தில் தான் திருமணமானது. என் வயது 21. எடை 61 கிலோ. எனக்கு மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்த்து என் கணவர் என் நடத்தையில் சந்தேகப்படுகிறார். நான் திருமணத்துக்கு முன்பு எந்தத் தவறும் செய்ததில்லை. இருந்தும் எனக்கு ஏன் இப்படி இருக்கிறது? எப்படி சரி செய்யலாம்? - பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

21 வயதில் 61 கிலோ எடை என்பது கொஞ்சம் அதிகம்தான். அளவுக்கதிக எடையின் காரணமாகவே உங்களுக்கு மார்பகங்கள் மற்றும் தொடைகளில் கோடுகள் விழுந்திருக்கின்றன. உடலின் எடை முழுவதையும் உங்கள் குதிகால்கள் தாங்குகின்றன. அதன் விளைவே இந்தக் கோடுகள். வாழைத் தண்டு சாற்றில் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து அடிக்கடி குடிக்கவும். வாரம் இரண்டு முறை வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிடவும். தினசரி உணவில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகு அதிகம் உள்ளபடி பார்த்துக் கொள்ளவும். வாரம் இருமுறை கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் குடிக்கவும். சாதம் ஒரு கப், காய்கறிகளும், கீரையும் இரண்டு கப் என சாப்பிடவும். தினம் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்கவும். இதையெல்லாம் செய்து வந்தாலே உங்கள் உடலின் ஊளைச் சதைகள் குறைந்து, வரிகளும் காணாமல் போகும். கணவரிடம் இதை விளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எடையைக் குறைத்து, அதை நிரூபிப்பது இன்னும் சிறந்தது.

என் வயது 27. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. மாத விலக்கு நான்கைந்து மாதங்களுக்கொரு முறை தான் வரும். இந்நிலையில் குழந்தையும் இல்லாததால், டி அண்ட் சி செய்தால் மாத விலக்கு சுழற்சியும் சரியாகும், கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்புண்டு என என் தோழி சொன்னதைக் கேட்டு இரண்டு முறைகள் அதையும் செய்து கொண்டேன். இப்போது எனக்குப் புதிதாக உடலெங்கும் ரோம வளர்ச்சி அதிகமாக ஆரம்பித்திருக்கிறது. டி அண்ட் சி செய்ததுதான் தவறா? ரோம வளர்ச்சி இப்படியே அதிகரிக்குமா? நிறுத்த வழி உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

ரொம்பவும் பயந்திருக்கிறீர்கள். மாதவிலக்கை முறைப்படுத்த நீங்கள் உட்கொண்ட மருந்துகள் தான் உங்களுடைய இந்தப் புதிய பிரச்சினைக்குக் காரணம். ஸ்டீராய்டு மருந்துகள் செய்த வேலை தான் எல்லாம். அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது கூடாது. கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்து மாதவிலக்கான முதல் இரண்டு நாட்களுக்குக் குடியுங்கள். அதற்கடுத்த மாதம் மாதவிலக்காகிற முதல் இரண்டு நாட்களுக்கு வெற்றிலை, பத்து மிளகு, ஐந்து பற்கள் பூண்டு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவும். அதற்கும் அடுத்த மாதவிலக்கின் போது வேப்பங்கொழுந்து சாப்பிடவும். இதெல்லாம் உங்கள் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கை அரைத்து சோப்புக்குப் பதில் உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும். அதிகப்படியான ரோமத்தை நீக்க, வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சை மற்றும் கிளிசரின் கலவை அது என்பதால் சருமத்தையும் பாதிக்காது. மாத விலக்கு சுழற்சி சரியானாலே, ரோம வளர்ச்சி குறையும். கருத்தரிக்கும் வாய்ப்புகளும் கூடும். கவலை வேண்டாம்.

என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா? - சி. ஜானகி, மேட்டூர்.

மண்பானை செய்கிறவர்களிடம் சுத்தமான களிமண் வாங்கி, அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக் கொண்டு, காலையில் குளித்து விடவும். இதை வாரம் மூன்று முறைகள் செய்யலாம். முள்ளங்கி வேக வைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் குடியுங்கள். உணவில் அடிக்கடி பயத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். முடிந்தால் மண் சட்டியில் சமைத்து சாப்பிடவும். தினம் காலையில் கைப்பிடியளவு கொத்த மல்லித் தழையை பச்சையாக சாப்பிடவும். நாட்டு அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

என் வயது 24. திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. திருமணமான ஆறே மாதங்களில் கருத்தரித்தேன். அப்போது குழந்தை வேண்டாமென அதை அபார்ஷன் செய்துவிட்டேன். அதன் பிறகு எனக்குக் கர்ப்பம் தங்கவே இல்லை. மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இப்போது ஹார் மோன் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். இதனால் கருத்தரிக்குமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

முதல் கர்ப்பத்தைக் கலைப்பது மிகப் பெரிய தவறு. குழந்தை வேண்டாம் என நினைத்த நீங்கள் அதற்கேற்ப இல்லற வாழ்வில் ஈடுபடுகிற போது பாதுகாப்பாக இருந்திருக்கலாம். அதைத் தவிர்த்து ஆறே மாதங்களில் உண்டான கர்ப்பத்தைக் கலைத்திருக்கக் கூடாது. உங்களுக்கு சினைப்பைகளில் தொற்றோ, கருக்குழாய் அடைப்போ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். முதல் வேலையாக நீங்கள் ழளுழு எக்ஸ் ரேவும், பெல்விக் ஸ்கேனும் செய்ய வேண்டும். ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்துங்கள். அவற்றால் உண்டாகிற பக்க விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். தவிர, உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் பார்த்து தான் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

என் வயது 21. இப்போது நான் இரண்டு மாதக் கர்ப்பம். கர்ப்பமாக இருக்கிறபோது இல்லற வாழ்வில் ஈடுபட்டால் சுகப் பிரசவம் நிகழும் என்று கேள்விப்பட்டேன். அது நிஜமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் ஈடுபடலாம்? அதனால் குழந்தைக்கு பாதிப்பிருக்குமா? - எல். ராஜகுமாரி, அறந்தாங்கி.

நீங்கள் கேள்விப்பட்ட விஷயம் ரொம்பவும் தவறானது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடைப்பட்ட மாதங்களில் கர்ப்பப் பைக்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவமாவதில் எந்தச்சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லற வாழ்வில் ஈடுபடுவதால் தொற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம். கர்ப்ப காலம் முழுவதுமே செக்ஸைத் தவிர்ப்பது என்பது ரொம்பவே நல்லது தான். சுகப் பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடிப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு போடலாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலாம். முருங்கைக் கீரையும், முட்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால் குடிக்க வேண்டியது மிக முக்கியம். குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரியாகப் பின்பற்றுங்கள். மற்றவர்கள் சொல்கிற அனுபவங்கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர் நோக்குங்கள்.

எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம் என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது. தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள். கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்வை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள். சுய இன்பம் என்பது எப்போ தாவது ஒரு மாறுதலுக்குச் செய்யலாம். நாளைக்கே உங்கள் கணவர் மீண்டும் உங்களிடம் நெருக்கமா கும்போது உங்களின் அந்தப் பழக்கம் அவருக்கு நெருடலை உண் டாக்கும். ஜாக்கிரதை.

என் வயது 19. எனக்கொரு விசித்திரமான பிரச்சினை. அந்த ரங்க உறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது. தர்மசங்கடமான இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்கள். -எம்.கே., நெல்லை.

மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பிறப்புறுப்பை தினம் நான்கைந்து முறைகள் கழுவவும். டாய்லெட் மற்றும் அங்கே வைத்திருக்கிற பக்கெட், மக் போன்ற எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அவை சுத்தமாக இல்லாமல் பாசிப் பிடித்து இருந்தால் கூட அதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, இம் மாதிரி பிரச்சினைகள் வரலாம். வெள்ளைப் படுதல் இருந்தால் வைட்டமின் சி மாத்திரை உட்கொள்ளவும். உணவில் பொன்னாங்கண்ணிக் கீரை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காபி மற்றும் டீயைக் குறைத்து, திக்கான பாலில் பாதாம் பருப்பைப் பொடி செய்து கலந்து குடிக்கவும். பழங்கள், பால், முட்டை இந்த மூன்றும் தினசரி சாப்பிட வேண்டியவை. போஷாக்கான ஆகாரம்தான் இப்பிரச்சினைக்கான முதல் தீர்வு. உபயோகிக்கிற உள்ளாடைகள் காட்டனாக, சுத்தமாக இருக்கட்டும். தினம் அவற்றை இரண்டு வேளைகள் மாற்றவும். மாதவிலக்கு நாட்களில் அதிகப் படியான சுத்தத்தைக் கடைப் பிடிக்கவும். குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்றவும். இவற்றையெல்லாம் செய்தாலே உங்கள் பிரச்சினைகள் சரியாகும்.

எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு சிறுநீரை அடக்க முடியாத நிலை உண்டாகி விட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால் கூட சிறுநீர் கசிகிறது. சிகிச்சை உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நிறைய பெண்களுக்கு இப்பிரச்சினை இருக்கிறது. பிரதான காரணம் இரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்று. வெளி வேலை, வீட்டுப் பொறுப்பு என இரட்டைச் சுமை சுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. மீந்து போன உணவு, முதல் நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். இரத்த சோகையைக் குணப்பபடுத்திக் கொண்டாலே இப்பிரச்சினை சரியாகும். ஈஸ்னோஃபிலியா இருந்தாலும் இப்படி இருக்கலாம். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரகத் தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவே உங்களுக்கு எதனால் இப்படியிருக்கிறது என்பதை நேரில் பார்த்துதான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

என் வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. புது மணப் பெண்ணாக வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. காரணம் எனது சிறுத்த மார்பகங்கள். அவரது கோபம் வேறு விஷயங்களில் வெடிக்கிறது. முதலிரவோடு முடிந்து போன என் தாம்பத்திய வாழ்க்கையை மலர வைக்க முடியுமா? மார்பக வளர்ச்சிக்கு சிகிச்சை ஏதும் உண்டா? - டி.சுஜா, திருச்சி.

மனைவியையே ஒதுக்கும் அளவுக்கு இது அப்படியொன்றும் பெரிய பிரச்சினையில்லை. உங்கள் கணவரின் காட்டுமிராண்டித் தனமான மனப்பான்மையின் வெளிப்பாடே இது. மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு, சாப்பிடுகிற உணவு எனப் பல விஷயங்களைப் பொறுத்து அமைவது. நாட்டு மருந்துக் கடைகளில் அமுக்கராக் கிழங்கு சூரணம் என்று கிடைக்கும். அதை வாங்கி நெய்யில் குழைத்து தினம் சாப்பிடவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சர்க்கரையும், சூடான நெய்யும் சேர்த்து தினம் மூன்று வேளைகள் கொஞ்சம் சாப்பிடவும். அதிலுள்ள ஈஸ்ட் மார்பக வளர்ச்சிக்கு உதவும். திராட்சை சாப்பிடுவதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பாதாம், அக்ரூட், பேரிச்சம்பழம் மாதிரி உலர் பழங்களை தினம் கொஞ்சம் சாப்பிடவும். நல்ல கெட்டியான தயிர் தினம் ஒரு கப் சாப்பிடவும். இரவில் பால் ஒரு டம்ளர் குடிக்கவும். முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடவும். வைட்டமின் ஈ கிரிம் என மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி, மார்பகங்களில் கீழிருந்து மேலாகத் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும். இதெல்லாம் உங்கள் திருப்திக்காக. கணவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். மார்பக அழகோ, அளவோ காலத்துக்கும் அப்படியே இருக்கப் போவதில்லை. நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பியை மாதிரி அதுவும் ஒரு வகை சுரப்பி அவ்வளவுதான். அதைப் பெரிது படுத்தி நிகழ் கால சந்தோஷத்தை மறக்க வேண்டாம் எனப் பேசுங்கள்.

எனக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என் வயது 27. என் கணவருக்கு விதைப்பை ஒன்று மட்டும் உள்ளது. முதலில் இரண்டுமே இல்லையாம். பிறகு ஆபரேஷன் செய்து ஒன்று மட்டும் உள்ளது. மற்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. மருத்துவர்களோ குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். சித்த மருத்துவத்தில் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டாக்க வழி ஏதேனும் உண்டா? -எஸ். கவிதா, ஊர் வெளியிட விரும்பவில்லை.

உங்கள் கணவருக்கு இரண்டு விதைப் பைகளுமே இருந்து, அவை இரண்டுமே இறங்கியிருந்தால் அல்லது ஒன்று மேலும், ஒன்று கீழும் இருந்திருந்தாலும் கூட குழந்தை பிறக்க வைக்க ஏதேனும் முயற்சிகள் செய்யலாம். ஆனால் அவருக்கு இரண்டுமே இல்லாமலிருந்து, பிறகு ஒன்று இறக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் அவருக்கு உங்களைக் கருத்தரிக்க வைக்கிற ஆற்றல் இருக்காது. செயற்கை மருத்துவ முறைகளும் பலனளிக்கும் என்று சொல்வதற்கில்லை. மன உளைச்சலும், பண விரயமும்தான் அதில் அதிகம். எனவே நீங்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குங்கள். அதிலும் உறவுக்குள் தத்து எடுக்க வேண்டாம். அது பின்னாளில் உங்களுக்குப் பல பிரச்சினைகளைத் தர வாய்ப்புண்டு. வெளியிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்கு முகவரியும், வாழ்க்கையும் கொடுங்கள்.
என் வயது 29. எனக்கு இரண்டு மார்பகங்களும் பெரியதாக உள்ளன. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற கொடி வேலித் தைலம் உபயோகித்தால் இப்பிரச்சினை சரியாகும் என்கிறார்களே, அது சரியா? மேலும் எனக்குக் கல்யாணமாகி, குழந்தை இல்லை. குழந்தை உண்டானால் இப்பிரச்சினையால் பால் சுரப்புக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மார்பகங்களின் அமைப்பு என்பது பரம்பரைத் தன்மை, உடல்வாகு போன்றவற்றைப் பொறுத்தது. அதைப் பற்றிய வருத்தம் உங்களுக்கு வேண்டாம். குழந்தை உண்டாகி, அதற்குத் தாய்ப்பால் கொடுத்தாலே, இப்பிரச்சினை ஓரளவு சரியாகும். பல பெண்களும் பயப்படுகிற மாதிரி மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மார்பக அளவைப் பொறுத்து தாய்ப்பாலின் சுரப்பு கூடவோ, குறையவோ செய்யாது. தினம் குளிப்பதற்கு சோப்பைத் தவிர்த்து, பயத்தம் பருப்பு மாவைத் தேய்த்துக் குளித்து வாருங்கள். அதற்கு மார்பக சதைகளை ஓரளவுக் குறைக்கிற சக்தி உண்டு. மற்றபடி உடற்பயிற்சி, யோகா போன்றவை மூலம்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சரியாக்க முடியும். தகுந்த யோகாசன நிபுணரிடம் கலந்தாலோசித்து சரியான ஆசனங்களைச் செய்ய ஆரம்பியுங்கள். தினம் மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பதும் நல்லது.
என் வயது 40. குழந்தை பாக்கியம் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் என் கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை அகற்றிவிட்டோம். என் கணவருக்கு வயது 55. இந்த வயதிலும் என்னுடன் உறவு கொள்ள விரும்புகிறார். அதனால் என் உடல் நிலை பாதிக்குமா? -வி. காளியம்மா, உத்தமசோழபுரம்.

கர்ப்பப்பையை அகற்றி விட்டதால் இனி உங்களுக்குக் குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இருக்காது. மற்றபடி நீங்கள், உங்கள் கணவருடன் விரும்புகிற வரை உறவு கொள்ளலாம். செக்ஸ் உறவு என்பது தம்பதியருக்குள் உண்டாகிற இயற்கையான எதிர்பார்ப்பு தான். அதற்கு வயதோ, வேறு விஷயங்களோ தடையாக இருக்கத் தேவையில்லை. மனசுதான் முக்கியம். உங்கள் கணவர் மனத்தளவில் இளமையாகவே இருப்பதாகத் தெரிகிறது. எனவே உறவுக்கு நீங்கள் உடன்படுவதில் தவறில்லை. இது உங்கள் இருவரின் உடல் நலத்தையும் எந்த வகையிலும் பாதிக்காது.

என் வயது 24. திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகிறது. மாதவிடாய் முறையாக இல்லை. எல்லா சோதனைகளும் செய்தாகி விட்டது. மருந்துகள் எடுத்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் இரண்டு மாதங்கள் சரியாக 28 நாட்களில் மாதவிலக்கு வந்தது. மருத்துவர் குழந்தை நிற்க மருந்து கொடுத்தார். அந்த மாதமே கருவுற்றேன். இரண்டு மாதங்களில் அபார்ஷன் ஆகிவிட்டது. ஒரு முறை டி.என்.சியும் செய்து விட்டேன். ஹார்மோன் டெஸ்ட் நார்மல். மீண்டும் நான்கு மாதங்களாக மாதவிலக்கு வரவில்லை. மாத விடாய் சரியாகி, எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -சரஸ்வதி, பாண்டிச்சேரி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு சினை முட்டை சினைக்கும் தன்மை குறைவாக இருப்பது தெரிகிறது. மாதவிடாய் முறையாக சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கொள்ளு வேக வைத்த தண்ணீரை வாரம் இரண்டு முறைகள் தவறாமல் குடிக்கவும். வாழைத் தண்டு வேக வைத்த தண்ணீரில் கொஞ்சம் தனியா தூளும், கொஞ்சம் சீரகத் தூளும் சேர்த்துக் குடிக்கலாம். பயத்தம் பருப்பும், வாழைத் தண்டும் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடவும். சமையலில் புதினா அடிக்கடி சேர்ப்பதுடன், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், தனியா தினமுமே சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக் காய் சாப்பிடவும். மாதவிலக்கு ஒழுங்காக வந்தால், முதல் மூன்று நாட்கள் கொள்ளு வேக வைத்த தண்ணீரை இரண்டு வேளைகள் கட்டாயம் குடிக்க வேண் டும். சினை முட்டை வந்தால்தான் மாதவிலக்கு வரும். இதற்கிடையில் உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனை செய்யவும். அவருக்கேதும் குறைபாடுகள் இருந்தாலும்கூட அபார்ஷன் ஆகும். மேற்சொன்னவற்றை எல்லாம் தாமதிக்காமல் செய்யவும். பயம் வேண்டாம். சரியாகும்.

என் வயது 18. வயதுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. வயதுக்கு வந்த பிறகு மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிலக்கு முறையாக வந்தது. அதன் பிறகு மூன்று முதல் ஆறு மாதங்கள் கழித்து வரும். ஆனால் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை இரத்தப் போக்கு இருக்கும். அதன் பிறகு எனக்கு எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு உடம்பு மோசமாகி விடும். பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போக்கை நிறுத்துவார்கள். அதன் பிறகு ஒன்றிரண்டு மாதங்கள் சரியாக வரும். மீண்டும் ஐந்தாறு மாதங்களுக்கு வராது. இப்போதைக்கு எனக்கு விலக்கு வந்து ஏழு, எட்டு மாதங்கள் ஆகிறது. மாத விடாய் வரும் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதற்காக நான் பார்க்காத வைத் தியமில்லை. இது இப்படியேதான் தொடருமா? சிகிச்சையே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத பெரம்பலூர் வாசகி.

நீங்கள் முதல் வேலையாக பெல்விக் ஸ்கேன் எடுக்க வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை. கர்ப்பப்பையில் கட்டியோ, புண்களோ உள்ளனவா, கர்ப்பப்பை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த ஸ்கேன். மனித உடலிலிருந்து இரத்தமானது எந்த வழியிலும் அளவுக்கதிகமாக வெளியேறக் கூடாது. இது இரத்த சோகையில் கொண்டு போய் விடும். மாதவிடாயின் போதான உதிரப் போக்கும் அப்படித்தான். நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். ஒரே மருத்துவரிடம் பொறுமையாக சிகிச்சையைத் தொடருங்கள். கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள் உடனடியாக சரியாகாது. கொஞ்சம் நாட்கள் ஆகும்.

என் மகளுக்கு வயது எட்டுதான் ஆகிறது. அதற்குள் மார்பகங்கள் டீன் ஏஜ் பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. தர்மசங்கடமாக இருக்கிறது. மற்றவர்கள் பார்வையில் இருந்து அவளைக் காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வதும் எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏதேனும் சிகிச்சை உண்டா? -டி. ஆனந்தி, சென்னை.

நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. உங்கள் மகளின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது. சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது உங்கள் மகளும் சீக்கிரமே வயதுக்கு வரலாம். அவளது மார்பக வளர்ச்சியைக் குறைக்க நினைக்காதீர்கள். அது இயற்கை. அதை ஒரு பெரிய விஷயமாக்கி அவளிடம் பேசாதீர்கள். அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலை மறைக்கும் உடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள்.

என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல் ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்று பற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும். ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்பு வரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார் மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்பு மற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரண மஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப் படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.

நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமான புத்தகங்களையும், படங்களையும் காட்டி அதிலுள்ளது போல என்னை சம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.

தன் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையை மனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம் என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிற போது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்று நம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம். அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாக மாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.

எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை தங்கவில்லை. மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் உறவு கொண்டும் கரு தங்குவதில்லை. உறவு முடிந்ததும், விந்தணுக்கள் உடனே வெளியேறி விடுகின்றன. அக்கம் பக்கத்தில் எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம் பித்துவிட்டார்கள். என்ன கோளாறாக இருக்கும்? என்ன சிகிச்சை வேண்டும்? -சி. மங்கையர்க்கரசி, ஆத்தூர்.

பொதுவாகத் திருமணமாகி, ஒன்றி ரண்டு வருடங்கள் வரை குழந்தை இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதன் பிறகும் கரு தங்கா விட்டால்தான் மருத்துவப் பரிசோதனை அவசியம். அதற்குள் கிளம்புகிற அக்கம் பக்கத்தாரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். விஞ்ஞான ரிதியாகப் பார்த்தால் விந்தணு என்பது வெளியேறுவது இயற்கை. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. உறவின் போது சிலதுதான் கருக் குழாய் வழியே கருப்பைக்குப் போகும். சிலது போனாலும், போகா விட்டாலும் வெளியேறவே செய்யும். எனவே இதற்கும், நீங்கள் கருத்தரிக்காததற்கும் தொடர்பில்லை. அரைகுறை விஷயங்களைக் கேள்விப்பட்டு அனாவசியமாகக் குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். கருத்தரிக்க தினசரி உறவு என்பதும் அனாவசியம். மாதத்தின் எல்லா நாட்களிலும் பெண்ணின் உடலில் கருமுட்டை உருவாவதில்லை. மாதவிலக்கானதிலிருந்து முதல் பத்து நாட்களைத் தவிர்த்து, அடுத்த பத்து நாட்களில் உறவு கொள்ளலாம். அதற்கடுத்த பத்து நாட்களையும் தவிர்க்கலாம். இடைப்பட்ட நாட்கள்தான் கருத்தரிக்க உகந்தவை. தினசரி உறவு கொண்டால்தான், அதுவும் பல முறைகள் உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கும் போல என்பது பலரது தவறான அபிப்ராயம். நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகும் கரு தங்கா விட்டால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

என் வயது 26. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம். அதன் பிறகு என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. உறவின் போது பிறப்புறுப்பு ரொம்பவும் தளர்ந்து விட்டதாகக் காரணம் சொல்கிறார். எனக்கு மட்டும்தான் இப்படியா? இதை சரிசெய்ய வாய்ப்பே இல்லையா? - எல்.டி., சென்னை.

பெண்ணின் உடம்பு என்பது கர்ப்பம் தரிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் முன்பிருந்த அதே நிலையில் காலத்துக்கும் இருக்காது. பெண்பித்தர்கள்தான் இப்படியெல்லாம் காரணம் சொல்லி மனைவியை விட்டு விலகியிருப்பார்கள். தன் பெண் பித்தை மறைக்க இப்படி மனைவி மேல் குறை சொல்கிற கணவர்களில் உங்களவரும் ஒருவராக இருக்கிறார். அந்தக் காலத்தில் எல்லாம் பெரும் பாலும் சுகப்பிரசவம்தான். எல்லாப் பெண்களுக்கும் இந்தத் தளர்வு இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டி மனைவியை விட்டு, விலகியதாக நாம் எந்த ஆணைப் பற்றியும் கேள்விப் பட்டதில்லை. இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். பிரசவித்த பெண்கள் எல்லாரும் சந்திக்கிற பிரச்சினைதான் இது. உங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களுக்கான விவரங்களை விளக்கமாகச் சொல்வார்.

என் மனைவிக்கு பிரபல டாக்டரிடம் சிசேரியன் செய்த பிறகு, காப்பர் டி போடப்பட்டது. அது போட்டு ஒரே மாதத்தில் உள்ளே போய் விட்டது. அது கருப்பையின் ஒரு ஓரத்தில் இருப்பதாகச் சொல்லி மறுமுறை குழந்தை பிறக்கும் போது எடுத்து விடலாம் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வேறு ஏதேனும் பாதிப்பு உண்டா? இதனால் கருத்தரிக்க ஏதேனும் கால தாமதம் ஆகுமா? -எஸ். கண்ணன், குலமங்கலம்.

முதல் வேலையாக உங்கள் மனைவிக்கு ஸ்கேன் செய்யுங்கள். அதன் மூலம்தான் அது எங்கே இருக்கிறது என சரியாகத் தெரிந்து கொள்ளமுடியும். வெறும் கருவிகளைக் கொண்டே எடுத்து விட முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். என்ன ஆனாலும் இப்படி காப்பர் டி உள்ளுக்குள் புதைந்திருக்கக் கூடாது. அது எந்த நிலையில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப்பொறுத்துதான் உங்கள் மனைவி கருத்தரித்து, சிசேரியன் செய்கிற போது எடுக்கமுடியுமா என்பதையும் முடிவுசெய்ய முடியும். காப்பர் டி ஏடாகூடமான இடத்தில் இருக்கிற பட்சத்தில்உங்கள் மனைவி கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம். அப்படியே கருத்தரித்தாலும், காப்பர்டி இருக்கிற நிலையின் காரண மாக, குழந்தை உருவாகிற வடிவமே மாறிப் போகக் கூடும். குழந்தை வளர்ந்து சுழலும் போது அதைக் குத்தலாம். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளதால், உடனடியாக ஸ்கேன் செய்து அதை அகற்றி விடுவது நல்லது.

எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான். திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -விஜயலட்சுமி, நாகர்கோயில்.

நிறைய ஆண்களிடம் காணப்படுகிற பிரச்சினைதான் இது. உடலளவில் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனத்தளவில் தன் மனைவியைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின் விளைவாகவே இப்படி இருப்பார்கள். இவர்களுக்குத் தேவை கவுன்சலிங். தாழ்வு மனப்பான்மையை விரட்ட, முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட் அல்ல) அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை எனத் தெரிந்து, அதற்கேற்ப கவுன்சலிங் கொடுப்பார்கள். பிறகு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான மருத்துவரையும், மருந்து களையும் பரிந்துரைப்பார்கள். இது முதல் கட்டசிகிச்சை. அடுத்து உங்கள் கணவருக்கு விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள் எப்படியிருக்கின்றன எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் கருத்தரிக்க முடியும்.

என் வயது 22. திருமணமாகி 13 மாதங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. ஒரு பக்க மார்பில் குழந்தை சரியாகப் பால் குடிக்காததால், அந்தப் பக்க மார்பகம் சிறியதாகி விட்டது. தாய்ப்பால் சுரப்பும் எனக்குக் குறைவாக இருக்கிறது. சிறியதாகி விட்ட மார்பகத்தை சரி செய்யவும், தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் ஆலோசனைகள் சொல்வீர்களா? -ஏ. சாந்தி, ஊர் வெளியிட விரும்பவில்லை.

நீங்கள் அசைவம் சாப்பிடுகிறவராக இருந்தால் பால் சுறா அதிகம் சேர்த்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை மதியத்தில் ஆட்டுக் கறியும், மீனும் சாப்பிடவும். சைவம் சாப்பிடுகிறவராக இருந்தால், பிஞ்சுக் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவும். கறிவேப்பிலை பவுடர் கால் டீஸ்ன் தினமும் சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடவும். மூன்று டம்ளர் பால் குடிக்கவும். மார்பகங்களின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருப்பது என்பது இயற்கை. அதை மருந்து, மாத்திரைகளால் நீங்கள் எது வும் செய்ய முடியாது. தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் இப்படி இருப்பவை, பிறகு ஒரு கட்டத்துக்குப் பிறகு தாய்ப் பாலை நிறுத்திய பிறகு சம அளவுக்கு வரலாம். கவலை வேண்டாம்.

என் வயது 36. காப்பர் டி போட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் வேறு ஒரு பிரச்சினைக்காக மருத்துவரை சந்தித்த போது, காப்பர் டி உள்ளே புதைந்திருக்கிற மாதிரித் தெரிவதாகச் சொன்னார். அதை அறுவை செய்துதான் எடுக்க முடியுமா? வேறு வழி உண்டா? இது ஆபத்தானதா? எத்தனை வருடங்களுக்கொரு முறை காப்பர்டியை மாற்ற வேண்டும்? -சி. ஈஸ்வாp, அந்தியூர்.

காப்பர்டியில் நிறைய வகைகள் உள்ளன. தரத்தைப் பொறுத்து, அவற்றை வருடத் திற்கொரு முறையோ அல்லது இரண்டு, மூன்று வருடங்களுக்கொரு முறையோ மாற்றிக் கொள்ளலாம். காப்பர் டி போட்டுக் கொண்ட சில பெண்களுக்கு இரத்தப் போக்கு திடீரென அதிகமிருக்கும். அப்படியிருந்தால், அதை எடுத்து விட்டு, சில நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடி போடுவார்கள். நீங்கள் பல வருடங்களாக அதைக் கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது இருக்கும் இடம் சரியாகத் தெரியும். மேலோட்டமாக இருந்தால், அறுவை சிகிச்சையின்றி, அதை எடுத்து விடுவார்கள். ரொம்பவும் ஆழமாக இருந்தால் அறுவை தேவைப் படலாம். அதை உங்களைப் பரிசோதித்த மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவரிடம் தாமதிக்காமல் ஆலோசனை பெறுங்கள். இதை எடுத்து விட்டு, மூன்று மாதங்கள் இடைவெளி தரவும். பிறகு உங்கள் உடல்நிலையைப் பொறுத்து மீண்டும் வேறு பொருத்திக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட, உங்கள் கணவரை ஆணுறை உபயோகிக்கச் சொல்வது யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாத எளிய கருத்தடை முறை.

என் கணவருக்கு வயது 40. அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. உறவின் போது முன்பிருந்த ஈடுபாடு அவரிடம் இல்லை. சர்க்கரை நோய் என்பது உறவின் மூலம் பரவ வாய்ப்புண்டா? -கே. நீலா, சென்னை.

உறவின் மூலம் சர்க்கரை பரவாது. பயம் வேண்டாம். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உறவில் ஈடுபாடு குறைவது சகஜமே. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு இரண்டும் தான் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள். நீரிழிவுநோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. நீரிழிவு நோயாளிகள் தினம் இரண்டு முதல் ஒன்பது கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டும். கலோரி குறைவான உணவுகளையே சாப்பிட வேண்டும். தினம் ஒரு வேளை கோதுமை உணவு அவசியம். கீரையும், காய்கறிகளும் தினசரி உணவில் கணிசமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது வெட்கப் படாமல் சர்க்கரை இல்லாத பானங்களையே கேட்டுக் குடிக்கவும். செயற்கை இனிப்புகூட வேண்டாம். இவை தவிர பிரத்யேகமாக மருந்துகளே தேவையில்லை. சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வென்றே சில யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் தினம் செய்யலாம். இப்படியெல்லாம் மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், செக்ஸ் உறவும் இயல்பாக இருக்கும். நூறு வயது வரை ஆரோக்கியமாகவும் வாழலாம்.

8 Comments:

At Sunday, June 03, 2007 8:30:00 AM, Blogger Unknown said...

thanks for your advice

 
At Sunday, February 10, 2008 11:24:00 PM, Blogger Mi said...

உங்களின் ஆலோசனை நேரத்தில் தரப்படும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன! பெண்களுக்கும், பெண்களின் நிலைகளையும், கஷ்டங்களையும் தெரிந்துகொள்ள்வதற்கும் பயனாக அமைந்தது! மிக்க நன்றி!

 
At Monday, August 11, 2008 10:07:00 PM, Blogger பூனக்குட்டி said...

எனக்கு திருமணமாகி இரண்டு அறை மாதம் ஆகிறது. திருமணத்திற்கு முன்னாடி period 28 நாட்கள் இடைவெளியில் வரும். திருமணத்திற்கு பிறகு முதல் மாதம் 30 வது நாள் வந்தது. அடுத்த மாதம் 33 வது நாள் வந்தது. ஏன் இவ்வ்வாறு நடக்கிறது? நான் எப்போது தாயவேன்?

 
At Saturday, October 11, 2008 4:46:00 AM, Blogger SeSa said...

எங்களுக்கு திருமணமாகி ஆறு வருடமாகிறது. தற்போது அவளுக்கு வயது 30. எனக்கு வயது 36. எங்களுக்கு 4 வயதில் குழந்தை இருக்கிறது. டாக்டர் ஆலோசானைப்படி, பிரசவம் முடிந்து 1 வருடம் கழித்து 'காப்போர் டி' வைத்து கொண்டாள். 3 வருடம் கழித்து அதை எடுத்துவிட்டு 3 மாத இடைவெளியில் மீண்டும் வைத்து கொண்டாள்.

என் சூழ்நிலை காரணமாகவும் அவள் ஆரோக்கியத்தை யோசித்தும், கடந்த 2 வருடமாக அவள் அடுத்த குழந்தை பற்றி பேசியபோதும் நான் தள்ளி போட்டு வந்தேன். நாங்கள் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறோம். இப்போது அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். இரண்டு மாதத்திற்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது 'காப்போர் டி' எடுத்து விட்டோம். ஆனால் 2 மாதங்களாக பீரியட்ஸ் வந்து விடுகிறது. மொழி பிரச்சனை இருப்பதால் இங்கு டாக்டரிடம் போக முடியாத நிலை. 'காப்பர் டி' எடுத்த பிறகு கருவாக எத்தனை மாதங்கள் ஆகும்? என் மனைவி எப்போது கருவுருவாள்? நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஆலோசனை எங்களக்கு மிகவும் பயன்படும். தயவு செய்து பதில் தரவும்

 
At Thursday, March 12, 2009 6:56:00 AM, Blogger Unknown said...

gjhgiu

 
At Tuesday, April 14, 2009 1:34:00 AM, Blogger kavitha said...

எனக்கு 23 வயது ஆகிறது 6 மாதத்துக்கு முன்பு ஒரு நம்பிக்கை துரோகி என்னிடம் தவறாக நடத்து கொண்டான் அவன் என்னை பலவந்தமாக 3 முறை பக் செய்தான், நான் கஷ்டப்பட்டு என்னை விடுவித்து கொண்டேன். இருத்தும் எனக்கு சிறிதளவு ரத்தம் வந்துவிட்டது. இனி நான் எபாடி வேறு ஒருவரை கல்யாணம் செய்ய முடியும், செய்தால் கணவராக வருபவர்க்கு என்மேல் சந்தேகம் வருமா.
நான் கன்னி தன்மை உடன் இருகிறேனா இல்லைய?

please reply as soon as possible

 
At Saturday, June 13, 2009 12:10:00 PM, Blogger archana said...

en vayadhu 28. enaku 2m normal delivery. pennurupu thalarndhu poi vitadhu. munbhu pol tight aaka vali unda. velinaadugalil ulladhu pol chennaiyil adharkana treatment unda. aruvai sigichai dhan idharku theerva. udaluravin podhu munbu pol tightaga illadhu pol unargirom. theervu sollungal please

 
At Friday, July 03, 2009 4:45:00 PM, Blogger pandiarajan said...

எனக்கு திருமணம் ஆகி பதினான்கு மாதங்கள் ஆகிறது . என் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வாய் பகுதியில் இருந்து துர்நாற்றம் வருவதாக கூறுகிறார் .ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை பல் துலக்கிய பிறகும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது . இதனால் உடலுறவின் போது சங்கோஜமாக உணர்கிறேன் .இதற்கு ஏதேனும் சிகிச்சை உண்டா ? .இப்படிக்கு வாசுகி ,திருப்பூர் .

 

Post a Comment

<< Home